Sunday, July 12, 2009


என் அடுத்த இலக்கு கவிச்சிதறல் என்னும் மாற்றுத் திறனுடையோரின் கவிதைத் தொகுப்பை வெளியிடுவது என திட்டமிட்டிருக்கிறேன். இதற்கான அறிவிப்பு மடல் வேண்டுவோர் மேற்காணும் மடல்களை டவுன்லோடு செய்து பார்க்க வேண்டுகிறேன்.

Saturday, February 14, 2009

வானம் வசப்படும்

வாழ்வின்
நெடும் பயணத்தில்,
பயண வழியெங்கும்
சாதனைச் சுவடுகளையும்,
சந்தோஷ ரோஜாக்களையும்
பதியனிட,

விடாமுயற்சி
எனும் அஸ்திரத்தை
அழகாய் எய்யப்பழகு.
அதன்பின் வானம் வசப்படும்.
மௌனத்தின் மதிப்பீடு !

என் குரலின்
மடிப்புகளில் உள்ள்
மௌனங்களினூடே
ஒளிந்திருக்கின்றன‌
உன்மீதான மதிப்பீடுகள்

என்
மௌனங்களை
வலிந்து பற்றி
வருடிக் கொடுத்து,
நாய்க்குட்டியென பழக்கி
மதிப்பீடுகளின் அகமுகம்
அறியமுயல்கிறாய்

ஆதலினால்,
இப்போதெல்லாம்
உன்னைக் கண்டதும்
அச்ச அவஸ்தையில்
வார்த்தைக் குவியல்களை
வாரியிறைத்துவிட்டு
ஓடியொளிகின்றன‌
என் மௌனங்கள் !
சாபங்களும் - வரங்களும் !

வாழ்க்கை
சாபங்களை மட்டுமல்ல,
வரங்களையும் கூட‌
கொண்டு வருகிறது.

ஒரு நிகழ்வின்
பாதிபலன் வரமாகவும்,
மீதி சாபமாகவும்
நம்முன் பகிரப்பட்டிருக்கிறது.

சாபங்களின்
சரிவை உணர்ந்து
வரங்களின்
வல்லமையை கக்கொள்ளுதலே
வாழத்தெரிந்தவனின்
அடையாளச் சுவடு !
தேடல்

நமக்கான‌
வாழ்வின் பாதைகளில்
எதையோ தேட,
கைகளில் தட்டுப்படுகிறது
ஏதேனும் ஒன்று

'தேடியது அதுதானா ?'
எனும் வினாவெழுந்தாலும்
கிடைப்பனவற்றையும்
விடுவதில்லை.

எனினும்,
நம் தேடல்
நீண்டு வளரும்
முடிவிலா சங்கிலியாய் !
கடைசி நாள்

வரப்புகள் பிரிப்பதில்
தொடங்கின பூசல்
வாழ்க்கையின்
கடைசி நாள் வரைக்கும்
தீர்ந்த பாடில்லை.

பக்கத்து வீடுதான்
எனினும்,
பலகாதத் தொலைவு
மனங்களுக்குள்.

நெற்றியில் முடிச்சுவிழ,
கண்களைச் சுருக்கி
பார்த்த
ஏளனங்கலந்த‌
அருவெறுப்புப் பார்வைகளின்
பிடியிலிருந்து இன்னமும்
மீள மறுக்குது மனசு.

எனினும்,
என் சுயகௌரவத்தின்
செவிகளில் வேகத்தோடு
பளீரென்றறைகிறது
பக்கத்து வீட்டு
மரண ஓலம் !
குறையொன்றுமில்லை !

உடலில்
ஊனமிருந்தாலும்,
உதிரச் சொந்தங்கள்
ஊக்கப்படுத்த,

நல்ல தோழமைகள்
தோளிணைய,
வாசித்த நூல்கள்
சுவாசத்தில் கலந்து
தன்னம்பிக்கை நல்க,

மனசின் வலிமை
மகத்துவங்கள் நிகழ்த்த,
குறையொன்றுமில்லை
என் நெஞ்சுக்குள் !