Saturday, February 14, 2009

வானம் வசப்படும்

வாழ்வின்
நெடும் பயணத்தில்,
பயண வழியெங்கும்
சாதனைச் சுவடுகளையும்,
சந்தோஷ ரோஜாக்களையும்
பதியனிட,

விடாமுயற்சி
எனும் அஸ்திரத்தை
அழகாய் எய்யப்பழகு.
அதன்பின் வானம் வசப்படும்.
மௌனத்தின் மதிப்பீடு !

என் குரலின்
மடிப்புகளில் உள்ள்
மௌனங்களினூடே
ஒளிந்திருக்கின்றன‌
உன்மீதான மதிப்பீடுகள்

என்
மௌனங்களை
வலிந்து பற்றி
வருடிக் கொடுத்து,
நாய்க்குட்டியென பழக்கி
மதிப்பீடுகளின் அகமுகம்
அறியமுயல்கிறாய்

ஆதலினால்,
இப்போதெல்லாம்
உன்னைக் கண்டதும்
அச்ச அவஸ்தையில்
வார்த்தைக் குவியல்களை
வாரியிறைத்துவிட்டு
ஓடியொளிகின்றன‌
என் மௌனங்கள் !
சாபங்களும் - வரங்களும் !

வாழ்க்கை
சாபங்களை மட்டுமல்ல,
வரங்களையும் கூட‌
கொண்டு வருகிறது.

ஒரு நிகழ்வின்
பாதிபலன் வரமாகவும்,
மீதி சாபமாகவும்
நம்முன் பகிரப்பட்டிருக்கிறது.

சாபங்களின்
சரிவை உணர்ந்து
வரங்களின்
வல்லமையை கக்கொள்ளுதலே
வாழத்தெரிந்தவனின்
அடையாளச் சுவடு !
தேடல்

நமக்கான‌
வாழ்வின் பாதைகளில்
எதையோ தேட,
கைகளில் தட்டுப்படுகிறது
ஏதேனும் ஒன்று

'தேடியது அதுதானா ?'
எனும் வினாவெழுந்தாலும்
கிடைப்பனவற்றையும்
விடுவதில்லை.

எனினும்,
நம் தேடல்
நீண்டு வளரும்
முடிவிலா சங்கிலியாய் !
கடைசி நாள்

வரப்புகள் பிரிப்பதில்
தொடங்கின பூசல்
வாழ்க்கையின்
கடைசி நாள் வரைக்கும்
தீர்ந்த பாடில்லை.

பக்கத்து வீடுதான்
எனினும்,
பலகாதத் தொலைவு
மனங்களுக்குள்.

நெற்றியில் முடிச்சுவிழ,
கண்களைச் சுருக்கி
பார்த்த
ஏளனங்கலந்த‌
அருவெறுப்புப் பார்வைகளின்
பிடியிலிருந்து இன்னமும்
மீள மறுக்குது மனசு.

எனினும்,
என் சுயகௌரவத்தின்
செவிகளில் வேகத்தோடு
பளீரென்றறைகிறது
பக்கத்து வீட்டு
மரண ஓலம் !
குறையொன்றுமில்லை !

உடலில்
ஊனமிருந்தாலும்,
உதிரச் சொந்தங்கள்
ஊக்கப்படுத்த,

நல்ல தோழமைகள்
தோளிணைய,
வாசித்த நூல்கள்
சுவாசத்தில் கலந்து
தன்னம்பிக்கை நல்க,

மனசின் வலிமை
மகத்துவங்கள் நிகழ்த்த,
குறையொன்றுமில்லை
என் நெஞ்சுக்குள் !
பயணிப்பு

நகரச்சந்தடியின்
நகராச் சாலைகளில்,
பயணிக்கும் தருணங்களில்
சூரிய வெப்பத்தை
உள்வாங்கி,
வெம்மையாய் வெளிப்படுத்தும்
தார்ச்சாலையின் உக்கிரத்தில்
என் முகங்கறுத்த போதிலும்,
பாதைகளினூடேயே
நீண்டு கடக்கிறது
என் வாழ்க்கை.
தொடரும் பயணம்

ஊர்முழுவதும்
அயர்ந்துறங்கும்
நடுநிசிப்பொழுதில்
யாருமற்ற தனிமை தேடி
நீளுகின்றன‌
என் கால்கள்

கடந்துபோகும்
பலகாதங்களுக்குப்பின்னும்
பயணிக்க வேண்டிய‌
நீள் தூரங்கள்
விழிகளில் விரிகின்றன‌

உடன்வந்த‌
காசுபணம், பெயர்புகழ்
குலகௌரவம், குடிப்பிறபு
என்கிற முகமூடிகளெல்லாம்
ஒன்றன் பின் ஒன்றாய்
கழன்றுகொள்ள‌
இன்னும் இன்னும் என‌
தேடிப்பயணிக்கின்றன‌
என் பாதங்கள் !
எப்போதும் போலவே...

ந‌ம்
சந்திப்புகளின் போது,
வலிந்து பற்றி
சப்த வில்லெடுத்து
வார்த்தைக் கணைகளால்
என் மலரினும் மெல்லிய‌
மெளனத்தை சிதறடிக்கிறாய்

என் மெளானம்
பாதரசக்குமிழ்கள் போல‌
திசையெட்டும் சிதறி
உருண்டோடுவதையும்,
அவற்றை மேட்டெடுக்க‌
யத்தனிக்குமென் முயற்சிகளையும்
இமையொட்டாமல்
வேடிக்கை பார்க்கிறாய்

'நீ
சிதறடிக்கவும்,
வேடிக்கை பார்க்கவும்
நானும் என் மௌனமும்
காட்சிப் பொருள்களா?'
என்று வினவத்தூண்டும்
கடுங்கோபம்
நெஞ்சுக்குள் அலைமோதும்

எனினும்,
உன் புன்னைகைகளை
தொலைத்துவிட விருப்பமில்லாததால்
எப்போதும் போலவே
மௌனித்திருக்கிறேன்
நான்
சுகதுக்கம்

ரோஜாவில்
முள்ளை உணருவதைவிட,
முள்ளின் மத்தியில்
ரோஜாவை காணக் கற்றுக்கொள்

காலணியில்லாமை குறித்து
கவலைப்படுவதைவிட,
காலேயில்லாதவனைக் கண்டு
திருப்தியுறக் கற்றுக் கொள்

ஏனெனில்,
சுகமொரு பக்கம்
துக்கமொரு பக்கம் என‌
இணைந்ததே
வாழ்க்கை நாணயம்.
நினைவுகள்

பொய்ம்மையே
வாழ்வியலாய்க் கொண்ட‌
மானுடத் தோப்பின்
மத்தியில்,

என்னுள் நான்
தொலைந்து போகிற‌
லெளகீகத் தருணங்களில்
நினைவுக்கு வருகிறது‍

என் பேனாவும்,
நிரப்பப்படாத‌
வெற்றுத் தாள்களும் !
புதியன ஏற்று... ... ...

இளமையை இழந்தால்
அனுபவம் பெறலாம்.

பிரம்மச்சரியம் இழந்தால்
இல்லறம் பெறலாம்.

காமத்தை இழந்தால்
கண்ணியம் பெறலாம்.

எப்போதும்,
எதையேனும் இழந்து,
எதையேனும் பெறு !

பழையன் கழித்து,
புதியன் ஏற்று
ஓடிக்கொண்டேயிருக்கும்
நதியைப் போல !
தேடல் வேட்கை

தேவைகளின் தேடலில்
ஒவ்வொரு நாளும்
புதிதாய் முளைக்கும்
மற்றொரு தேவை !

தேடலிம்போது
தேவைகள் மாறுபடும்.
எனினும், நீண்டு வளரும்
முடிவிலாச் சங்கிலியாய் !

விற்பதும், வாங்குவதுமாய்
தொடரும் வணிகத்தில்
காலம், அனுபவம்
இரண்டுமே பயன்படு பொருள்கள்

இருப்பதை இழந்து,
இல்லாததைப் பெற்று என‌
எப்போதும், எதையேனும்
தேடிக் கொண்டே
நாம் !
முகமறியாப் பொழுது...

நிழல்களை நேசிக்கும்
மனிதர்களுக்கு மத்தியில்
நிஜத்தை யாசிக்கும்
தொலைபேசித் தேவதையாய்
பரிச்சயமானாய் நீ

அந்தக்கணத்தில்
என் வாழ்வின்
அர்த்தத்தை தரிசித்த‌
நெகிழ்வு என்னுள்!

பிரபஞ்சத்தின்
சகல் எல்லைகளும்
நம் வார்த்தை விநியோகங்களில்
பரிமாறாப்பட்டன.

பலவேளைகளில்
வார்த்தைகள் தீர்ந்து போனபின்
மெல்லிய மெளனங்களும்
துணைகளாயின.

ஒரு
அந்திப் பொழுதில்
நீ விரும்பியபடி
நம் சந்திப்பும் நிகழ்ந்தது.

உன் விழிகளில்
அதிர்வின் பூகம்பம்.
அன்றோடு அறுப்பட்டது
நம் நட்பு.

எனதான‌
உடல் ஊனத்தை
உற்று நோக்கிய‌
உன் விழிகளுக்கு
புலப்படாமல் போனதெப்படி
ஊனப்படாத
என் உணர்வு.
பொய்முகம் களைய...

ஓரடிவைக்க‌
ஒருயுகமாய்த் தோன்றும்.
இடையூறுகளை ஏற்க‌
இதயம் தருமாறும்.

கனவுகளை தள்ளீப்போட‌
ஆசையாய் மனம்
பரபரக்கும்.

நிஜங்களை
நினைக்காமலிருக்க‌
திரையரங்குகளை மனம் நாடும்.

தினம் தினம்
பொய்முகம் போர்த்தி,
இலட்சியத்தை இடைநிறுத்தி என‌
எண்ணற்ற குறைகள்
என்னுள்ளிருந்தாலும்,
என்னையும் கூட‌
ஒரு நல்ல முன்னோடியென‌
வைத்தியங்கும் ஓருலகம்.

என்பொருட்டு இயலாதெனினும்,
அவர்களுக்காகவேணும்
களைய வேண்டும்
என் குறைகளை !
செய்தித்தாள்

அரசியல் வியாபாரிகளின்
தகிடுதத்தங்கள்,
உணர்வுகளைப் புறந்தள்ளிய‌
உறாவுகளின் மீறல்கள்,

அன்றாடங்காய்ச்சியின்
அடிவயிற்று அவலம்,
அடுத்த தலைமுறையின்
அழிவுப்போக்கு,

எங்கேனும்
ஓர் விபத்து என‌
தினம் தினம்
அபச்செய்திகளையே சொன்னாலும்
அன்றாடம் வாசிக்க‌
ஆவல் கொள்கிறது
நம்பிக்கை மனசு.